
சிதம்பரத்தில் அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க பேரவையின் மண்டல தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என் குமார், தோப்பு சுந்தர், இணை செயலாளர் ரங்கம்மாள் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்துகொண்டு பேசுகையில் ''வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சியுடன் இணைந்து கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தொகுதியை மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற அனைவரும் உறுதியோடு பணியாற்ற வேண்டும்.
வரும் ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடைபெற உள்ளது இதில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளனர். அதிமுக ஆட்சியில் வழங்கிய தாலிக்குத் தங்கம் திட்டம் உள்ளிட்டவை ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும். கூட்டணி பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் நமது கூட்டணி வெற்றி கூட்டணி'' என பேசினார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் கழக மீனவர் பிரிவு இன செயலாளருமான கே.ஏ.ஜெயபால் தலைமை கழக பேச்சாளர் ஆரணி கலை முரசு காசிநாதன் உள்ளிட்டோர் தொழிற்சங்கம், கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், கழக அம்மா பேரவை துணை செயலாளர் கே.எஸ்.கே பாலமுருகன், அம்மா பேரவை செயலாளர் கானூர் பாலசுந்தரம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.