குடியுரிமை சட்டத்திற்கு எதிரான திமுக கூட்டணிக் கட்சிகளின் பேரணி சென்னை எழும்பூரில் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கே.எஸ்.அழகிரி, கி.வீரமணி, வைகோ எம்.பி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் எம்.பி, காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா, ப.சிதம்பரம், வேல்முருகன், ஈஸ்வரன், கனிமொழி எம்.பி, தயாநிதிமாறன் எம்.பி, ஐஜேகேவின் ஜெயசீலன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பேரணியில் பங்கேற்றவர்கள் குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி முழக்கத்தை எழுப்பினர். இந்த பேரணியில் சுமார் 60,000- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடக்கிறது. பாதுகாப்பு பணியில் 2 கூடுதல் ஆணையர்கள், 12 துணை ஆணையர்கள் உள்பட 5,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 4 ட்ரோன்கள், 110 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அதேபோல் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா, வருண் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.