
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சில இடங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் மே ஆறாம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை, வண்டலூர், பல்லாவரம், முடிச்சூர், சேலையூர் ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பிரபல திரையரங்கின் முன்பகுதி மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த திரையரங்கில் உள்ள ஐந்து திரைகளிலும் திரைப்படங்கள் திரையிடப்பட்ட நிலையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. உள்ளே ரசிகர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முன்பகுதி சேதம் அடைந்ததால் பலத்த சத்தம் கேட்டது. உடனடியாக ரசிகர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது