மல்டி லெவல் மார்கெட்டிங்கில் போடபட்ட பணத்தைத் திருப்பிக் கேட்டவருக்கு, பார்சலில் வெடிகுண்டு அனுப்பி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் நீடாமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச் சேர்ந்த வீரக்குமார் என்பவர் அதே ஊரில் ஸ்டுடியோ மற்றும் வீடியோ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று நீடாமங்கலத்தில் செயல்படும் தனியார் கூரியர் சேவை மையத்தில் இருந்து, வீரகுமாருக்கு பார்சல் ஒன்று வந்திருப்பதாகவும், அந்த பார்சலை உடனடியாக வந்து பெற்றுக் கொள்ளும்படியும் தொலைப்பேசியில் அழைத்துக் கூறியுள்ளனர்.
வீரகுமாரும் உடனடியாகச் சென்று பார்சலை வாங்கியுள்ளார். ஆனால், பார்சல் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து, வீட்டிற்கு தயங்கியபடியே எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், இந்த பார்சல் திருச்சி முகவரியில் இருந்து வந்திருந்ததைக் கண்டதும் அவருக்கு சந்தேகம் அதிகமானது. அதன்பிறகு நீடாமங்கலம் காவல் நிலையத்தில் பார்சலைக் காட்டி புகார் அளித்தார். பார்சலை பிரித்துப் பார்த்ததுமே அதில் வெடிகுண்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்துவந்த நிபுணர்கள் அந்த பார்சலை சோதனை செய்த பிறகு அது ஜெலட்டின் குச்சிகள் என்றும், இது வெடித்திருந்தால் 15 முதல் 20 அடி வரை பாதிப்பு ஏற்படும் என்றும், கிணறு தோண்டவும், பாறைகள் வெடிப்பதற்கும் பயன்படுத்தக் கூடிய பொருள் என்றும் தெரிவித்தனர். வெடிபொருட்களை செயலிழக்கச் செய்து, பாதுகாப்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, மண்ணில் புதைத்தனர்..
இதுகுறித்து வீரகுமார் கூறுகையில், "திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய (எல்ஃபின் இ-காம்) 'அறம்' மக்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளான ரமேஷ் மற்றும் ராஜா ஆகியோர் தான் இதை அனுப்பி இருப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் பல லட்சம் வரை முதலீடு செய்துள்ளேன். தற்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டு திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தேன், அதனால்தான் தன்னை மிரட்டுவதற்காக, (எல்ஃபின் இ-காம்) 'அறம்' மக்கள் நலச்சங்கம் இந்த வெடிபொருட்கள் அனுப்பி இருக்கக் கூடும்," எனக் கூறுகிறார்.