அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷனின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் - பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில், ரூ.1003 கோடி முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று (23.01.2024) மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்தும் தொடரும் முதலீடுகள். நம் கைகளில் எப்போதும் இருக்கும் செல்போன்களைப் பாதுகாக்கும் கொரில்லா கிளாஸ்களை (Gorilla Glass) உற்பத்தி செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்பிராகம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், – பிக் டெக் மற்றும் தமிழக முதலீட்டு ஊக்குவிப்புக்கான முகமை இடையே காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் - பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இலக்கை நோக்கி விரைவோம், இளைஞர்கள் துணையோடு உயர்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.