
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தைக் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்துக் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்திக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி (15.07.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக ஆங்கில ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு, “சிந்தனையுடன் திட்டமிடுவது என்பது உடனடி பிரச்சினைகளைத் தீர்ப்பது மட்டுமல்ல. நாம் நினைத்துப் பார்க்காத வகையில் சமூகத்தை மாற்றுகிறது. முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு வருகை தருவதும், கடுமையான நோய்கள் மூலம் பாதிக்கப்படுவதும் கணிசமாகக் குறைத்துள்ளது, அதே நேரத்தில் கவனம், நினைவாற்றல் மற்றும் கற்றல் விளைவுகளை இத்திட்டம் மேம்படுத்துகிறது.
நன்கு ஊட்டமளிக்கப்பட்ட குழந்தை பள்ளியில் சிறப்பாகச் செயல்பட்டு, நீண்டகால சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. தமிழ்நாடு பெண்களுக்குக் கல்வி மூலம் அதிகாரம் அளித்துள்ளது, இது மொத்த கருவுறுதல் விகிதத்தை (T.F.R.) குறைத்து பாலின இடைவெளிகளைக் குறைத்துள்ளது. அதே தொலைநோக்கு அணுகுமுறையுடன், திராவிட மாடல் அரசாங்கம் குறிப்பிடத்தக்க, தொலைநோக்கு நன்மைகளைத் தரும் மூலோபாய நல நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது” எனப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.