இன்று (28-08-2018) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏகோபித்த ஆதரவோடு தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் உரையாற்றிய போது பேசுகையில்,
விழித்துக் கொண்டே ஒரு கனவு கண்டேன். ஒரு அழகான எதிர்காலத்தை நான் கனவு கண்டேன். இந்த நாளில் அந்த கனவின் சில துகள்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் - நம் கழகம் – நம் தமிழினம் – நம் நாடு – நம் உலகம் இவை அனைத்தும் புத்தம் புதியதாய், பேரழகாய் மகிழ்ச்சியில் வாழும் கனவு அது.
காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளா விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும். இன்று நீங்கள் பார்க்கும், கேட்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான். “புதிதாய் பிறக்கிறேன். இது வேறு ஒரு நான்.”
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மரபணுக்களோடும், நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடும் இதோ உங்கள் முன்னால் பிறந்திருக்கிறேன். என்னோடு உடன் பிறந்திருக்கக்கூடிய கோடிக்கணக்கான உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! இது புதிய நாம்! அந்த அழகான எதிர்காலத்தில் யார் நம் கழகத்தினர்?
தன் சாதியே உயர்ந்தது என்று நினைப்போர் அல்ல. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரையும் தன் உடன் பிறப்பாக நினைப்போர். எளியோருக்கு கரம் கொடுப்போர்.
கடவுள் எதிர்ப்பாளர்கள் அல்ல. தாம் நம்பவில்லை எனினும் பிறரின் நம்பிக்கையை மதிப்போர். யார் தவறு செய்தாலும் அது நான் என்றாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுப்போர். அந்த அழகான எதிர்காலத்தில் நம் கழகத்தின் கொள்கைகள் என்ன?
பகுத்தறிவு என்பது அறிவெனும் விழி கொண்டு உலகை காண்பது என்பதை உரக்கச் சொல்லுதல். ஆணுக்கு பெண் இங்கு சமம் என மதித்தல். திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் சம உரிமை பெற்றுத்தருதல். தனி மனித மற்றும் ஊடகக் கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுத்தல், கருத்துச் சுதந்திரத்தை போற்றிப் பாதுகாத்தல். பிறமொழிகளை அழித்து இந்தியா முழுவதுக்கும் மதச்சாயம் பூச நினைக்கும் கட்சிகளை எதிர்த்தல். இவை எல்லாம் என் நீண்ட கனவின் சில துகள்கள். இந்த எதிர்காலம் தூரத்தில் இல்லை. இதோ இந்த நொடியிலிருந்து மெய்ப்பட போகிறது.
இந்தக் கனவை முழுமையாக மெய்ப்பிக்க நான் துடித்துக் கொண்டிருக்கிறேன். அதை தனி மனிதனாக என்னால் செய்ய இயலாது என்பதையும் நான் அறிந்தே பேசிக் கொண்டிருக்கிறேன். என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளே, நீயில்லாமல் என்னால் இந்த பெருங்கனவை மெய்ப்பிக்க முடியாது.
இது என் கனவு மட்டுமல்ல, நம் கனவு. நம் கழகத்தின் கனவு. ஏன், இந்த தமிழகத்தின் கனவு அது தான். வா! என்னோடு கை கோர்க்க வா! என நெகிழ்ச்சி உரையாற்றினார்.