
திருச்சி மாவட்டம் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோளம்பாறை ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது முன்னுக்குப் பின் பேசிய வரை விசாரணை செய்தனர். அதில் அவர் சண்முகா நகர் 24வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சிவகுமார் என்பது தெரிய வந்தது.
மேலும் அவருடன் வந்தவர் இந்திரா நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் கணேஷ் என்பதும் தெரியவந்தது. இவர்கள் திருச்சி மாவட்டம் மற்றும் மாநகரம் முழுவதும் லாட்டரி சீட்டை செல்போன் மூலமாகச் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவர்களைக் கைது செய்த உறையூர் போலீசார் அவர்களிடம் இருந்த 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம், 5 செல்போன்கள், 5 லேப்டாப் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் யார் யாரிடம் இவர்கள் லாட்டரி விற்பனை செய்துள்ளார்கள். இவர்களுடன் தொடர்பில் உள்ள லாட்டரி வியாபாரிகள் யார் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.