
கன்னியாகுமரி மாவட்டம், பெரிய விளையைச் சேர்ந்த குருநாதன் சுஜா தம்பதியருக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தச்சூழலில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குருநாதன் உடல் நலமின்றிக் காலமானார். பின் பெரியவிளையில் தனியே குழந்தைகளுடன் வசித்து வந்த சுஜாவிற்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜூக்கும் பழக்கம் ஏற்பட்ட நேரத்தில் அந்தோணிராஜின் மனைவி அவரை விட்டுப் பிரிந்து செல்ல பின்பு அந்தோணிராஜ் சுஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் இவர்கள் குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம், காவல் கிணறில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு குடியேறினர். அங்குள்ள ஓட்டலில் இருவரும் வேலை பார்த்து வருகின்றனர். இதனிடையே சுஜாவின் கடைசிக் குழந்தையான மகேஸ்வரி (வயது 10) நேற்று (17/11/2021) அங்குள்ள பேக்கரி கடையில் பிஸ்கட் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு அதற்கு பணம் தராமல் வீட்டிற்குச் சென்றதாகத் தெரிகிறது. இதனை பேக்கரி கடை உரிமையாளர் வளர்ப்புத் தந்தையான ஜேசு அந்தோணி ராஜூவிடம் தெரிவித்து குழந்தையைக் கண்டித்து வைக்குமாறு கூறியிருக்கிறார்.
இதில் ஆத்திரமான ஜேசு அந்தோணிராஜ் ராஜு வீட்டிற்கு சென்று தனியாக இருந்த மூன்று பிள்ளைகளிடமும் விசாரிக்க, அவர்கள் பதில் சொல்லாமல் போன நேரத்தில் கோபமான ஜேசு அந்தோணிராஜ் ராஜு மூன்று குழந்தைகளையும் தாக்கி மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதில் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் கதறியபடி தப்பிச் சென்றனர். பொது மக்கள் தீயை அணைத்து அவர்களைக் காப்பாற்றினர். தகவலறிந்து வீடு திரும்பிய சுஜாவும், அக்கம் பக்கத்தினரும், படுகாயமடைந்து கதறிக் கொண்டிருந்த மகேஸ்வரியை மீட்டு அருகிலுள்ள நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே மூச்சுத்திணறல் காரணமாக ஜேசு அந்தோணி ராஜூம் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த சுஜாவின் புகார் அடிப்படையில் பணகுடி இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி வளர்ப்புத் தந்தை ஜேசுராஜின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மூன்று குழந்தைகள் மீது வளர்ப்புத் தந்தை தீ வைத்துக் கொல்ல முயன்ற கொடூரம் மாவட்டத்தைப் பரபரப்பாக்கியுள்ளது.