
தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்கால கோட்டையான பொற்பனைக்கோட்டையில் அகழ்வு செய்யப்படவுள்ள இடத்தைச்சுற்றி அகழ்வாய்வு இயக்குநர் பேராசிரியர் இனியன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன், அகழ்வுப் பணியை மேற்பார்வையாளர் கே.அன்பழகன் ஆகியோர் தொன்மைப் பொருள் மேலாய்வினை செய்தனர். ஆய்வின் போது தொல்லியல் ஆய்வுக் கழக உறுப்பினர்கள் ராஜாங்கம், பீர்முகம்மது, வேப்பங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
அகழ்வாய்வுக்குழி அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பல்வேறுபட்ட வகையிலான மணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை நுட்பமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பச்சை, கருஞ்சிவப்பு, ஊதா, பழுப்பு, கருமை, இள மஞ்சள் வண்ணம் கொண்டவையாகவும் உள்ளன.
வளையல்:
கருப்பு மற்றும் ஊதா நிறமுடைய வளையலின் உடைந்த பகுதிகள் கிடைத்துள்ளன. இவை கண்ணாடி வகையைச் சேர்ந்ததாக உள்ளன.

உலோகப் பொருட்கள்:
ஒரு உலோக வளையலின் துண்டுப் பகுதியும் கிடைத்துள்ளது. இது கனமானதாக இருக்கிறது. உலோகத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்தபிறகே உலோகத்தின் பெயரை தெரிவிக்க இயலும். உருக்கு மூலம் உருவாக்கப்பட்ட சிறு கருவியும், இரும்புத்துண்டும் கிடைத்துள்ளது. இவற்றின் பயன்பாடு குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
கண்ணாடிப் படிகம்:
நிறமற்ற கண்ணாடி படிகம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் முனைகள் மிக நுட்பமாக தீட்டப்பட்டுள்ளது. இது ஆபரணங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.
மட்பாண்டக் குறியீடுகள் மற்றும் மட்பாண்ட வடிவங்கள்:
முழுமையற்ற நிலையில் இரண்டு வகையான பானை குறியீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. கருமைநிற பானை ஓடுகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் மிகுதியாக காணப்படுகிறது. இவற்றின் வாய் மற்றும் கழுத்துப்பகுதியில் பல்வேறு வடிவங்களில் அழகு படுத்தப்பட்டுள்ளது. சிறுதட்டு, கிண்ணங்கள், கலயங்களின் உடைந்த பகுதிகள் கிடைத்துள்ளன.

இத்துடன் மிகப்பெரிய கொள்கலன்களின் அடி பகுதிகள், உருக்கு உலைகளின் அடிமானங்கள், உலோகக்கழிவுகள் உள்ளிட்டவை மிகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேற்பரப்பு ஆய்வின் மூலம் கிடைத்த இந்த பொருட்கள் பொற்பனைக்கோட்டையின் செழுமையையும் உலோகவியலில் கோட்டையில் இருந்த மக்கள் பெற்றிருந்த அறிவையும் காட்டுவதாக இருக்கிறது. அகழ்வாய்வு பணி தொடர்ந்து நடைபெறும் போது இன்னும் பல தகவல்கள் நமக்கு ஆச்சரியமூட்டுவதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.