கரோனோ வைரஸ் தடுப்பு என்கிற மருத்துவ போர் உலக நாடுகள் முழுக்க நடந்து வருகிறது. இந்தியாவில் அனைத்தும் முடங்கி விட்டது. இது எப்போது தீரும் என்ற அச்சம் சாமானிய மக்கள் வரை ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறம் தனி மனித வருவாய் முதல் பெருவணிக வருவாய் வரை அனைத்தையும் கேள்விக்குறியாக்கி அடுத்தது எப்படி என்கிற அபாயத்தை ஏற்படுத்திவிட்டது. இந்தநிலையில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி பொருள் ஏற்றுமதியாக முடியாமல் முடங்கியதால் பல ஆயிரம் கோடிக்கான விடை தெரியாமல் உள்ளது.
தமிழகத்திலிருந்து வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பொருளில் முக்கியமானது ஜவுளி, இதையடுத்து விவசாய பொருட்கள். இப்போது இது கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இது பற்றி தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஈரோடு யுவராஜா நம்மிடம் " ஏற்றுமதி வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அதன் பாதிப்பு அதிகம் ஏற்றுமதி நிறுவனங்கள் ஓரிரு மாதங்களுக்கு முன்பே அதிக அளவு ஆர்டர்கள் கொடுத்திருந்தது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து குறிப்பாக இத்தாலி ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து தமிழகத்தில் பல்வேறு ஆர்டர்களை கொடுத்திருந்தனர். ஆனால் இப்போது அந்த பொருட்களை பெற முடியாது என அந்த ஏற்றுமதி நிறுவனங்கள் மேலும் இரண்டு மாத காலம் அவகாசம் கேட்கிறது. இப்போது உற்பத்தியான பொருட்கள் அப்படியே ஸ்டாக் ஆகியுள்ளது. அது மட்டுமில்லாமல் ஏற்கனவே தயாரித்து அனுப்பி வைத்த பொருளுக்கான தொகையும் மேலும் தாமதமாகும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இந்தநிலையில் வர்த்தகம் மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளில் நிறுவனங்கள் வாங்கிய கடனை உடனடியாக அடைக்க முடியவில்லை ஆகவே சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்துவதற்கு கால அவகாசம் மத்திய அரசு கொடுக்க வேண்டும். ஏற்கனவே இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளான அமெரிக்கா ஐரோப்பியா போன்ற நாடுகள் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் கொடுத்துள்ளது. அதேபோல் இந்திய அரசும் செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் இப்போது உள்ள நெருக்கடியை கவனத்தில் கொண்டு ஜிஎஸ்டி வரி வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் குறைக்க வேண்டும்." எனக் கூறினார்.
நிறுவனங்கள் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது போல தனி மனிதர்களின் வருவாய் குறைந்துள்ளது. ஓட்டல்கள், சந்தைகள், கால்நடை விற்பனை, வணிக நிறுவனங்கள் மூடல், உற்பத்தி பொருட்கள் முடக்கம், இதனால் வேலையின்மை இப்படி நடுத்தர மற்றும் ஏழை மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் சிறு, குறு நிறுவனங்களான விசைத்தறி தொழில்பேட்டைகள், விவசாய பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு மின்சார கட்டணத்தை இந்த இரண்டு மாதங்களும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன் மற்றும் உழவு பொருட்களுக்கு பெற்ற வங்கி கடன்களுக்கு இரண்டு மாதம் வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளும் எழுந்துள்ளது.