சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாணவி சக மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவருக்கு 3 மாணவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி துறை பேராசிரியரிடம் புகார் கொடுத்த போதிலும் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஐஐடியின் 'உள் புகார் கமிட்டி' அறிக்கை அளித்த போதிலும் ஐஐடி நிர்வாகம் தரப்பில், இந்த பாலியல் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்நிலையத்திலும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட மேற்குவங்க மாணவி கடந்த 22ஆம் தேதி மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதாகவும், மாணவிக்கு துணை நிற்போம் எனவும் ஐஐடி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முன்னாள் ஆராய்ச்சி மாணவன் கிங்ஷோ தேப்சர்மாவை கொல்கத்தாவில் வைத்து மயிலாப்பூர் போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.