
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (14-03-25) தாக்கல் செய்தார்.அதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியான நிலையில் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடையாறு ஆற்றை சுத்தப்படுத்தி மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் நகரில் 'தாயுமான தனிப்பெரும் தலைவன் நகைச்சுவை அரங்கம்' என்ற தலைப்பில் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ''எப்பொழுது மழை வந்தாலும் அடையாறு ஆற்றில் கலக்கும் மழைநீர் சூளைபள்ளத்தை மூழ்கி விடும். சூளைப்பள்ளமும் மூழ்கிவிடும். சைதாப்பேட்டை பக்கம் ஜோதிராமலிங்க நகர், செட்டித்தோட்டம், ஜோதியம்மாள் நகர், நெருப்பு மேடு, அபித் காலனி, திடீர் நகர், சூர்யா நகர், கோட்டூர்புரம் உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் அடையாறு ஆறால் பாதிக்கப்படும்.
தமிழக முதல்வர் 1,500 கோடி ரூபாய் நிதி கொடுத்தது 30 மாதத்திற்குள் அடையாறு ஆற்றை மேம்படுத்துவோம் என கூறியிருக்கிறார். அந்தத் திட்டம் முடிந்தது என்றால் 30 மாதத்தில் அடையாறு ஆறு என்பது லண்டனில் இருக்கும் தேம்ஸ் நதியைப் போல் மாறிவிடும். சிங்கப்பூரில் இருக்கும் சிங்கப்பூர் ரிவர் போல் உலக நாடுகளின் அழகாக ஆறுகள் எங்கெங்கே இருக்கிறதோ அதுபோல் ஆகிவிடும். நகர நாகரிகத்திற்கு மிகப்பெரிய சிறப்பு அந்தந்த ஊரில் ஓடிக் கொண்டிருக்கின்ற ஆறுகள். ஆறுகளினால் அந்த ஊர்களுக்கு பெயர். அந்த வகையில் சென்னைக்கும் அடையாறு என்ற ஆறும் பேர் என ஆவதற்கு 1500 கோடி ரூபாய் செலவில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 30 மாத காலத்தில் இந்த பணிகள் முடிவு பெற இருக்கிறது'' என்றார்.