எல்லா வசதிகளும், தகுந்த சூழலும் உள்ள நகர்புறத்தை சார்ந்தவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதித்தால் பெருமையோடு கொண்டாடும் நாம், சாலை வசதியே இல்லாத, மங்கிய மின்விளக்கு வெளிச்சங்கள், யானை உட்பட விலங்கினங்கள் வாழும் மலைப்பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்திலிருந்து கல்வி கற்று தனது தனி திறமையால், அதுவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி இரண்டு தங்கம் பெற்று தமிழ் கலையை தலை நிமிர வைத்துள்ளார் மாணவி கீர்த்தனா.
சந்தன வீரப்பன் காடு என இப்போதும் கூறப்படும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதி. இதில் உள்ள தாளவாடி மலைப்பகுதியில் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரம் செல்லும் வழியில் தமிழக எல்லையில் உள்ளது ராமாபுரம் என்கிற குக்கிராமம். இங்கு குடும்பத்துடன் வசிக்கிறார் விவசாயியான குமார், இவரது மனைவி ஜெயம்மா. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் தான் கீர்த்தனா. தாளவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு, தற்போது பெற்றோரின் முயற்சியால் கோவையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இவருக்கு சிறுபிள்ளையாக இருக்கும் போதே விளையாட்டில் அதிக ஆர்வம். அதில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகமும் இருக்க இதை முழுமையாக புரிந்து கொண்ட பெற்றோர் கீர்த்தனாவை சிலம்பாட்ட பயிற்சியில் சேர்த்து அதில் பயிற்சி பெற வைத்தனர். கீர்த்தனாவுக்கு பயிற்சி கொடுத்த பயிற்சியாளர் சுதாகர் என்பவர் கீர்த்தனாவின் அசாத்திய திறமையை கண்டு வியந்து தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். ஈரோடு மற்றும் மாவட்ட, மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் கலந்துகொண்டு விளையாட வைத்தார். அதில் பல பதக்கங்களை வென்ற கீர்த்தனா, சென்ற முறை கன்னியாகுமரியில் தெற்காசிய அளவில் நடந்த போட்டியிலும் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதனை தொடர்ந்து கீர்த்தனா மலேசியாவில் உள்ள கெடா நகரில் நடைபெற்ற முதல் உலகக்கோப்பை சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றார்.ஆனால் அதற்கான செலவு...?
ஒரு ஏழை குடும்பம் லட்சக்கணக்கான பணத்திற்கு எங்கே போவார்கள்? அப்போது தாமாக வந்து உதவியது ஒரு தனியார் நிறுவனம் . அவர்களின் உதவியுடன் மலேசியா சென்றார். அங்கு இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். சென்ற 2 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் கீர்த்தனா சீனியர் பிரிவில் இரட்டை வாள் வீச்சு போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தினார். மற்றும் குழு கம்பு ஆட்டத்தில் இரண்டு தங்கப்பதக்கங்களையும், தொடுமுனை என்கிற ஆட்டத்தில் வெண்கல பதக்கத்தையும் வெற்று எல்லோரையும் அசத்தினார்.
ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவி கீர்த்தனா இந்த போட்டிகளில் கலந்துகொள்வதற்காக மலேசியா சென்று வருவதற்கான செலவுகளை ஒரு தனியார் செய்ததால் உலக அளவிலான இந்தப்போட்டியில் பங்கேற்று தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பாட்டத்தில் சாதனை படைத்துள்ளார் கீர்த்தனா."படிக்க வைக்கவே ரொம்ப கஷ்டப்படுறோம். எங்க மகளிடம் உள்ள திறமையை அரசாங்கம் ஊக்கப்படுத்த வேண்டும் அரசு உதவி செய்தால் பல்வேறு சாதனைகளை எங்கள் மகள் படைத்து தமிழர்களுக்கும் நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்." என கீர்த்தனாவின் தாய், தந்தையர் கூறினார்கள்.
எழுத்தறிவு குறைவான அந்த மலைகிராமத்தில் அரசுப்பள்ளியில் பயின்று பொருளாதார சிரமத்திலும் கல்வியால் முன்னேறலாம் என்ற நம்பிக்கையில் கல்லூரி படிப்பு வரை சென்று, நமது தமிழ் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்தில் உலக அளவில் நடந்த போட்டியில் துணிச்சலாக கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்று தங்க மங்கையாக ஊர் திரும்பிய கீர்த்தனாவை சந்தனவீரப்பன் நடமாடிய அந்த தாளவாடி மலை கிராமத்தின் ஒட்டு மொத்த மக்களிடமும் மகிழ்ச்சியையும், பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவன உதவியுடன் ஒரு மாணவி இவ்வளவு சாதிக்கும் இதே நேரத்தில் தமிழக அரசின் விளையாட்டுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது எனவும் பலர் கேட்டு வருகின்றனர்.