உலக வன உயிரினங்கள் தினத்தையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு விலங்குகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது தான் உயிரியில் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகள் நமக்கு தெரியவந்தது.
திருவான்மியூரில் இருந்து தரமணி செல்லும் சாலையில் உள்ளது சென்னை பல்கலைகழக மாணவியர் விடுதி. இந்த விடுதியின் முன்பாக தற்போது 30க்கும் மேற்பட்ட மான்கள் தங்களுடைய இருப்பிடத்தை இழந்து, தண்ணீருக்கும், உணவுக்கும் பொதுமக்களை எதிர்பார்த்து பரிதாபமாகக் கிடக்கின்றன. இந்த மான்களுக்கு அப்பகுதி பொதுமக்களே கோசாப்பழம் போன்ற பழவகைகளை உணவுகளாக அளித்துச் செல்கின்றனர். அதில்தான் அவை தங்கள் உயிரை தக்க வைத்துக்கொண்டிருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலை குறித்து காவல்துறைக்கும், வனத்துறைக்கும் பலமுறை தகவல் தெரிவித்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள். இந்தநிலைக்கு என்னக் காரணம் என்று விசாரித்த போது,
தற்போது, மான்கள் உணவிற்காக சாலையோரமாக கேட்டின் உள்ளே இருந்த தன் இடத்தை பறிகொடுத்து நின்றுகொண்டிருக்கும் அதே இடம் தான், 20 ஆண்டுகளாக கந்தன்சாவடியில் இருந்து மத்திய கைலாஷ், ஐ.ஐ.டி வரையிலும் இந்த மான்களின் சொந்த இருப்பிடமாக இருந்துள்ளது. ஆனால், தற்போது சென்னை மெட்ரோ மேம்பாலத்திற்காக இந்த காட்டின் நடுவில் பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்பிறகு அந்த காட்டை சுத்தம் செய்து இந்த அரசு தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மான்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சாலையோர வியாபாரி ஒருவர் கூறுகையில், பாவம் இந்த மான்கள் வேறு இடம் செல்வதற்கு வழியே இல்லை. சுற்றிலும் வளாகங்கள், வணிக நிறுவனங்களாகவே உள்ளன. இதைபற்றி வனத்துறை, காவல்துறைக்கு தகவல் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. இப்போதாவது பரவாயில்லை பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வந்து வைக்கிறார்கள். வரும் காலத்தில் அதுவும் வைக்க ஆள் இல்லாமல் போனால் அவற்றின் கதி என்னவென்று நினைத்தாலே பரிதாபமாக இருக்கிறது என்கிறார்.
இந்த இடத்தில் 30 மான்கள்களுக்கு மேலாக இருந்துள்ளன. தற்போது 10 மான்கள் கூட இல்லாத நிலையில், மான்கள் குறைந்து போவதற்கு யார் காரணம்? இல்லை வேலியே பயிரை மேய்கிறதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழத்தான் செய்கிறது.
இந்நிலையில், மீதம் இருக்கும் மான்களையாவது வனத்துறை காப்பாற்றி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுமா? என்ற எதிர்ப்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.