இந்திய திருநாட்டின் 74 வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக்கொடி ஏற்றினார்.
முன்னதாக சென்னை இராஜாஜி சாலையில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொண்டார். சுதந்திர தின விழாவில் 4வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
நான்காவது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன் என தனது சுதந்திர தின விழா உரையை தொடங்கினார். அந்த உரையில்,
நாட்டு மக்கள் அனைவருக்கும் 74 வது சுந்தந்திர தின விழா வாழ்த்துக்கள். சுந்தந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வு ஊதியம்16 ஆயிரம் ரூபாயிலிருந்து 17 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் சிறப்பு ஓய்வூதியம் 8 ஆயிரத்திலிருந்து 8,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம் விரைவில் திறக்கப்படும். மக்களின் அன்பு, ஆதரவைப் பெற்றுள்ள நான் மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கருதி வருகிறேன். அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்.
மாநில அரசு நீட்தேர்வு கூடாது என வலியுறுத்தி வருகிறது. அண்டை மாநிலங்களுடன் தமிழக அரசு சுமூக உறவை பேணி வருகிறது. இந்த சமூக உறவால் நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. கரோனா நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு 6 ஆயிரத்து 550 கோடி செலவு செய்துள்ளது என்றார்.
உரைக்கு பிறகு சுதந்திர தின விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.