கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இந்தப் படம் இராணுவத்தில் மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது மனைவியாக சாய் பல்லவி நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எ.ஏ. செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். மேலும் திரைத்துறையிலிருந்தது ரஜினி, விஜய், சிவகுமார், சூர்யா, ஜோதிகா சிம்பு, இயக்குநர்கள் அட்லீ, எஸ்.ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், அஷ்வத் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, ஞானவேல் ராஜா உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர்.
இதனிடையே காஷ்மீர் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் உள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி திரையரங்கை முற்றுகையிட முயன்றனர். மேலும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி காஷ்மீர் மக்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளீர்கள் என பல்வேறு கேள்விகள் எழுப்பி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் திரைப்பட இயக்குநர்கள் வசந்த பாலன், கோபி நயினார் உள்ளிட்டோரும் படக்குழுவை விமர்சித்திருந்தனர். இதற்கிடையே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்ததால், படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டை 8 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பை பாராட்டி இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் அவரை நேரில் அழைத்து கௌரவித்தது.
அதைத் தொடர்ந்து நேற்று(30.11.2024) அமரன் படக்குழுவினர் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர். தேசப்பற்றோடு மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை படமாக்கியதற்காகவும் நமது தேச மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இப்படம் அமைந்ததாலும் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டு தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Still captivating audiences in theaters, #Amaran will also stream on @NetflixIndia starting December 5th. Witness the journey of a true hero #Amaran5thweek #AmaranMajorSuccess #MajorMukundVaradarajan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
A Film By… pic.twitter.com/x0sOMse08d— Raaj Kamal Films International (@RKFI) November 30, 2024