தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. சுமார் 3 மணி நேரத்தில் இது பெரும்பாலும் நகராமல் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி இது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 50 சென்டிமீட்டர் மழையும், புதுச்சேரியில் 46 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதுவே இதுவரை பதிவான மழையின் அளவுகளின் தரவுகளின் அடிப்படையில் அதிகபட்சமாகும். இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி 21 சென்டிமீட்டர் மழை புதுவையில் பதிவாகியிருந்தது. தற்போது 46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் சென்னையில் மழை நீர் அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. இதனை ஒட்டி சென்னை பட்டாளம் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த பகுதி மீது அக்கறையோடு தனிக் கவனம் செலுத்தினார். இந்த பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் போது கூட ஆய்வு செய்தார். அப்போது தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தியதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
எங்கெல்லாம் அபாய குரல் கேட்கிறதோ அங்கெல்லாம் ஆதரவு கரம் நீட்டுகிற முதல்வராக மக்களின் துயர் தீர்க்கிற முதல்வராக மு.க. ஸ்டாலின் களத்தில் நிற்கிறார். அவரின் உத்தரவின் பேரில் அமைச்சர்களாகிய நாங்களும் களத்தில் இருக்கிறோம். சென்னை பெருநகர மாநகராட்சியும் களத்தில் நிற்கிறது. நிச்சயம் மக்களுக்குத் துயர்கள் ஏற்படாத வகையில் எங்களுடைய பணி அமையும். தமிழக அரசைப் பொறுத்த அளவில் தனியார் வானிலை ஆய்வு மையம் சொல்லுகிற கருத்தையும் ஏற்றுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.