பரமத்தி வேலூர் அருகே, மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் (62). விவசாயி. இவருடைய மனைவி பழனியம்மாள் (55). இவர்கள் தங்களது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து, அதில் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த கொட்டகைக்கு வீட்டில் இருந்து வயர் மூலம் மின்சாரம் எடுத்துள்ளனர். ஜூலை 21ஆம் தேதி இரவு, பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜூலை 22) காலையில் பழனியம்மாள் கொட்டகைக்குச் சென்றார். அப்போது அவர் தரையில் அறுந்து விழுந்திருந்த மின்சார வயரை தொட்டபோது, திடீரென்று மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த பரமசிவம், மனைவியைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அடுத்தடுத்து கணவன், மனைவியின் அலறல் சத்தம் கேட்டு பதற்றத்துடன் ஓடிவந்த பக்கத்து வீட்டு வாலிபர், அவர்களைக் காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. எனினும், லேசான காயத்துடன் அந்த வாலிபர் உயிர் தப்பினார்.
மூர்ச்சையாகிக் கிடந்த பரமசிவம், பழனியம்மாள் ஆகிய இருவரையும் மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், கணவன், மனைவி இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. லேசான காயம் அடைந்த பக்கத்து வீட்டு வாலிபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பரமத்தி வேலூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.