அஜர்பைஜான் நாட்டின் பாக்கு என்ற இடத்தில் இருந்து ட்ரோஸ்னி என்ற 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விமானம் ஒன்று கடந்த 25ஆம் தேதி சென்று கொண்டிருந்தது. கஜகஸ்தான் நாட்டின் அக்டாவ் என்ற இடத்தில் பறந்துகொண்டிருந்த போது கீழே விழுந்து நொறுங்கி விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விமான விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விமான விபத்து குறித்து விசாரணையும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அஜர்பைஜான் பயணிகள் விமானத்தை ரஷ்யா ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. அதற்கு ஆதாரமாக, விமான பாகங்களில் குண்டு துளைக்கப்பட்ட காட்சிகளை உக்ரைன் வெளியிட்டுள்ளது. உக்ரைனின் குற்றச்சாட்டை மறுத்த ரஷ்யா, விசாரணை முடியும் முன்பே இவ்வாறு குற்றச்சாட்டு வைப்பது சரியல்ல என ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, “விசாரணையின் முடிவுகளுக்கு முன் ஏதேனும் கருதுகோள்களை முன்வைப்பது தவறானது. நாங்கள் நிச்சயமாக இதைச் செய்ய மாட்டோம், யாரும் இதைச் செய்யக்கூடாது. விசாரணை முடியும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.