![Husband and wife arrested in Aruppukottai couple case](http://image.nakkheeran.in/cdn/farfuture/HGxRdmRJZr1Se4Mre9hcEX_JkSgWV8mvYhL-fy5OT48/1666094944/sites/default/files/inline-images/100_46.jpg)
அருப்புக்கோட்டையில் இரட்டைக் கொலை நடந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், சிறப்பு தனிப்படை காவலர்கள் தற்போது குற்றவாளிகளை கைது செய்திருக்கிறார்கள். அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகர் வடக்கு 2-வது தெருவைச் சேர்ந்தவர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர்களான சங்கரபாண்டியன் – ஜோதிமணி தம்பதியர். இவர்களது மகன் சதீஷ் சென்னையில் பணிபுரிவதால் இவ்விருவரும் தனியாக வசித்து வந்தனர்.
கடந்த ஜூலை 18 ஆம் தேதி, சங்கரபாண்டியன் – ஜோதிமணி தம்பதியினரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு 7 தனிப்படைகள் அமைத்தனர். ஆனாலும் புலனாய்வில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது.
![Husband and wife arrested in Aruppukottai couple case](http://image.nakkheeran.in/cdn/farfuture/JMXbsCrJF-Cyuy7PZbjOf8P6a6147oPT5yQ744mqW2U/1666095011/sites/default/files/inline-images/99_38.jpg)
இந்நிலையில், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படையினர் தொடர்ந்து ஆய்வு செய்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் ஜோதிபுரம் 7-வது தெருவில் வசிக்கும் சங்கர் அடிக்கடி சைக்கிளில் சென்றது தெரிந்திருக்கிறது. சங்கரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சங்கர், தனது மனைவி பொன்மணியுடன் கொலை செய்யப்பட்ட சங்கரபாண்டியன் வீட்டிற்கு எதிரே சில மாதங்களுக்கு முன்பு குடியேறியிருக்கிறார். அப்போது சங்கரபாண்டியன் – ஜோதிமணி தம்பதியரிடம் பழகியிருக்கிறார். ஒருநாள் சங்கரபாண்டியனிடம் பணம் கேட்டிருக்கிறார். அவர் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சங்கர், வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த சங்கரபாண்டியனை கழுத்தில் குத்தி கொலை செய்திருக்கிறார். சத்தம் கேட்டு வந்த ஜோதிமணியையும் கொலை செய்திருக்கிறார். பிறகு, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தனது மனைவி பொன்மணியின் உதவியுடன் அங்கிருந்து தப்பியிருக்கிறார். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் அனைத்தும் தெரிய வர, சங்கரும் பொன்மணியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.