Skip to main content

சென்னையில் போலி சான்றிதழுடன் செயல்படும் பெட்ரோல் நிலையங்கள் எத்தனை? - காவல்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு!

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
How many petrol stations are operating in Chennai with fake certificates? - Commissioner of Police ordered to respond!

 

எத்தனை பெட்ரோல் நிலையங்கள் சென்னையில் போலி சான்றிதழ் மூலம்  செயல்படுகின்றன? இது குறித்து காவல்துறை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகரில் பெட்ரோல் விற்பனை நிலையம் தொடங்க வேண்டுமென்றால், சென்னை காவல் ஆணையரிடம் தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும்.  இச்சான்றிதழைச் சமர்ப்பித்தால்தான், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு உரிமம் வழங்கும். இந்தச் சான்றிதழ்களை,  முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெயரில் போலியாகத் தயாரித்து வழங்கிய ஆர்.கே.நகரைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள்,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்கள்.  கடந்த பிப்ரவரி மாதம்,  சிவகுமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

இதனைத் தொடர்ந்து,  இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சிவகுமாரின் மனைவி லலிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.பிரதாப்குமார் ஆஜராகி, மனுதாரரின் கணவர்,  சென்னையில் பல பெட்ரோல் நிலையங்கள் தொடங்க காவல் ஆணையர் பெயரில் போலி தடையில்லாச் சான்றிதழ்கள் தயாரித்துக் கொடுத்துள்ளார். அதனால்தான்,  குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்  என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  ‘போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’  என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த குற்றவியல் வழக்கறிஞர், ‘கடந்த மார்ச் மாதம்   18-ம் தேதி வரை,  இந்தக் கும்பலிடம் போலி தடையில்லா சான்றிதழ்களைப் பெற்று, சென்னை மாநகரில் 32 பெட்ரோல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து,  மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்துக்கும், நாக்பூரில் உள்ள பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் ஆகியோருக்கும்,  மத்திய குற்றப்பிரிவு போலீசார் 32 கடிதங்கள் அனுப்பியும், இதுவரை பதிலில்லை.  கடிதங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து,  கடந்த 8-ம் தேதி நினைவூட்டல் கடிதமும் காவல்துறையால் அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.

‘மார்ச் மாதம் வரை 32 போலி சான்றிதழ்கள் என்றால், அதன்பிறகு நடந்த புலன் விசாரணையில் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்ப,  ‘தற்போதுவரை 74 போலி தடையில்லா சான்றிதழ்களை இந்தக் கும்பல் வழங்கியிருக்கிறது.  அதனடிப்படையில் பல இடங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்கியிருப்பது தெரியவந்துள்ளது’ என்று குற்றவியல் வழக்கறிஞர் பதில் அளித்தார்.

தொடர்ந்து நீதிபதிகள்,  ‘போலிச் சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில்,  ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து, உயிர்ச் சேதம் ஏற்பட்டால் யார் இழப்பீடு வழங்குவார்கள்? சட்டரீதியான பல பிரச்சனைகள் வராதா?’  என்று கேட்டனர்.

மேலும் நீதிபதிகள்,  ‘இந்த வழக்கில், மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர், பெட்ரோலியம் மற்றும் வெடிமருந்து பாதுகாப்பு அமைப்பின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கிறோம். அவர்கள், போலீஸ் அனுப்பிய 32 கடிதங்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? என்பதற்கு விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யவேண்டும். அதுபோல, சென்னையில் எத்தனை பெட்ரோல் விற்பனை நிலையங்கல் போலி தடையில்லா சான்றிதழ்களுடன் இயங்குகின்றன? என்பது குறித்து,  காவல் ஆணையர்  விரிவான பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். மனுதாரரின் கணவர் சிவகுமார் உடல்நலம் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை வழங்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த வழக்கை வருகிற 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்” என உத்தரவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்