புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சிறுஞ்சுனையை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் அன்னவாசல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும் புல்வயல் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்ததும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில், பெண் காவலர் ஜெயந்தி கர்ப்பம் அடைந்த நிலையில், அன்னவாசல் காவல் நிலையத்தில் அனைத்து பெண்களுக்கும் நடக்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால் காதல் திருமணம் என்பதால், உறவினர்கள் வளைகாப்பு நடத்துவார்களா என்ற ஏக்கம் இருந்ததை அறிந்த சக பெண் காவலர்கள் அன்னவாசல் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டவர்களிடம் சொல்ல..
இது நம்ம குடும்பம்.. நாமலே காவல் நிலையத்தில் வைத்து ஜெயந்தி ஆசைப்படி வளைகாப்பு நடத்துவோம் என்ற காவல் அதிகாரிகள், அதற்கான நாளை குறித்ததுடன் ஏற்பாடுகளையும் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இலுப்பூர் காவல்துறை டி.எஸ்.பி. அருள் மொழிஅரசு, காவல்துறை ஆய்வாளர்கள் அன்னவாசல் சந்திரசேகரன், இலுப்பூர் உஷா நந்தினி ஆகியோர் தலைமையில் காவலர் ஜெயந்திக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு வைபவத்தை நேற்று (21/07/2022) நடத்திய சக காவல்துறையினர் சம்பிரதாயத்திற்காக இல்லாமல் வீட்டில் உறவினர்கள் நடத்துவதைப் போலவே ஜெயந்திக்கு வளையல்கள் அணிவித்து சந்தனம், குங்குமம் வைத்து ஐந்து விதமான உணவு விருந்து உபசாரம் செய்தும் குடும்ப நிகழ்ச்சியாக நடத்தினர்.
தன் ஆசையை தனக்கே தெரியாமல் ஏற்பாடு செய்து திடீரென நடைபெற்ற, இந்த வளைகாப்பு நிகழ்வைப் பார்த்து காவலர் ஜெயந்தியும, அவரது காதல் கணவர் பிரசாந்தும், இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் நாகராஜன், ஜெயஸ்ரீ. சரண்யா, உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர். இந்த வளைகாப்பு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.