நாமக்கல் மாவட்டம் கடந்த 1997 ஆம் ஆண்டு 2 வருவாய் கோட்டங்கள், 8 வட்டங்கள், 30 வருவாய் பிர்க்காக்களுடன் (Firka) உருவாக்கப்பட்டது. கடந்த 2011 ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகையின் எண்ணிக்கை 17 லட்சத்து 26 ஆயிரத்து 601 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 169 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட பிற செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சங்கங்களையும் சேர்த்து மொத்தம் 816 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில், நாமக்கல் மாவட்டம், கோழிப்பண்ணை, லாரி பாடி பில்டிங், முட்டை உற்பத்தி, ஆமணக்கு எண்ணெய் பதப்படுத்தும் தொழில் ஆகிய பல முக்கிய தொழில்களுக்கு பெயர் பெற்றதாகும். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்டத்தில் 45 கிளைகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 29 கிளைகள் என மொத்தம் 74 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 98.70 கோடி ரூபாய் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 55.15 கோடி ரூபாய் பங்குத்தொகையுடன் இவ்வங்கி செயல்பட்டு வருகிறது. மேலும், 2020-21 ஆம் ஆண்டில் 22.17 கோடி ரூபாய், 2021-22 ஆம் ஆண்டில் 20.37 கோடி ரூபாய் மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 18.24 கோடி ரூபாய் என தொடர்ந்து லாபம் ஈட்டியுள்ளது.
இத்தகைய சூழலில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டதிற்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதனைப் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் பயன்பெறும் வகையிலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட முதலமைச்சர் ஆணையிட்டார். இந்நிலையில் இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி இன்று (6.3.2024) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.