ஹாரன் அடித்துக்கொண்டே சாலையில் பயணித்த லாரி டிரைவருக்கு, போலீஸ் கொடுத்த நூதன தண்டனை தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
திருவாரூர் மாவட்டம் சிட்டி பகுதிக்கு அருகே உள்ள கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதியன்று அதே பகுதியில் போக்குவரத்து துணை காவல் ஆய்வாளர் ராஜ்மோகன் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சேலத்திலிருந்து இரும்பு கம்பிகளை ஏற்றி வந்த லாரி ஒன்று நாகப்பட்டினம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரனை வண்டியில் பொருத்திக்கொண்டு தொடர்ந்து அதிக சத்தம் எழுப்பிக் கொண்டே சென்றுள்ளார். இதனால், அந்த வழியாகச் சென்ற பொது மக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்துள்ளது.
இதை கவனித்த போக்குவரத்து துணை காவல் ஆய்வாளர் ராஜ்மோகன், அந்த லாரியை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், அந்த லாரியை ஓட்டிச் சென்ற நபர் அதனை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளார். அதன்பிறகு, அந்த லாரியை விரட்டிச் சென்ற துணை ஆய்வாளர், விளமல் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தார். அப்போது அந்த லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் பெயர் அஜித் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர் தடை செய்யப்பட்ட ஏர்ஹாரனை பயன்படுத்திய காரணத்திற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அந்த ஏர்ஹாரனை கழட்டி அதன் மேல் லாரியை ஏற்றி உடைக்கச் செய்து நூதன முறையில் தண்டனை வழங்கப்பட்டது.
சாலையில் இடையூறு செய்த லாரி ஓட்டுநருக்கு நூதன தண்டனை வழங்கிய போக்குவரத்து துணை காவல் ஆய்வாளரின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.