தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் உள்ள குரங்கணி கொழுக்குமலையில் ட்ரெக்கிங் சென்ற சுற்றுலா பயணிகள் 39 பேர் காட்டு தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தீ விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்து பற்றி விசாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வருவாய்த்துறை செயலர் அதுல்ய மிஸ்ராவை விசாரணை ஆணையராக நியமித்தார். அதன் அடிப்படையில் நேற்று தேனி வந்த மிஸ்ரா, இன்று வனத்துரை மற்றும் போலீசார் உதவியுடன் அப்பகுதியில் சம்பவத்தன்று தீயில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டு வந்த குரங்கணியை சேர்ந்த சில இளைஞகர்களையும் அழைத்து கொண்டு ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குரங்கணி கொழுக்குமலைக்கு சென்றார்.
அங்கு சம்பவம் நடந்த ஒத்தமரத்தடி அருகே உள்ள பள்ளத்தில் விழுந்ததில் ஒன்பது பேர் எப்படி இறந்தார்கள் என்பதை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் கேட்டார். அதுபோல் அந்த பள்ளத்தில் விழுந்து தீ காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தவர்கள் ஏதாவது சொன்னார்களா? என்ற கோணத்திலும் சம்பவ இடத்திலேயே கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நின்று கொண்டே விசாரணை நடத்தினர் மிஸ்ரா.
அதன் பின் அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களிம், ட்ரெக்கிங் வந்தவர்கள் எத்தனை பேர்? முதல் நாள் இரவு எங்கு தங்கினார்கள்? மறுநாள் எத்தனை மணிக்கு புறப்பட்டனர்? அப்பொழுது வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டதா? அல்லது அவர்கள் பாதி வழியில் செல்லும் போது காட்டு தீயில் மாட்டிக் கொண்டார்களா? என்று கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு சில தொழிலாளர்கள் அவர்கள் போய் கொண்டு இருக்கும் போது கீழ் இருந்து புகை வந்து கொண்டு தான் இருந்தது அது தெரிந்தும் அவர்கள் ஜாலியாக பேசி சாப்பிட்டு கொண்டும் போட்டோவுடன், செல்பியும் எடுத்து கொண்டு இருந்தனர். அதன் பிறகு தான் அவர்கள் தீயில் சிக்கி கொண்ட விஷயமே தெரியும் என்றனர்.
அதை எல்லாம் உன்னிப்பாக கேட்டவர், தொடந்து கொழுக்குமலை வனப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தியவாரே இன்று இரவு கொழுக்குமலை எஸ்டேட்டில் தங்கி இருந்து விட்டு நாளை மலையை விட்டு இறங்கி குரங்கணி மக்களிடம் விசாரணை நடத்த இருக்கிறார்.