எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சற்று காட்டமாக கூறினார். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டாதது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
சாதாரண நாள்களில் மாதத்தில் நான்கு நாள்கள் சொந்த மாவட்டமான சேலத்தில் முகாமிடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸ் பரவலால் ஏழை மக்கள் பலர் உணவின்றி தவித்து வரும் நிலையில் சேலத்திற்கு வருவதை தவிர்ப்பதாக நக்கீரனில் குறிப்பிட்டு இருந்தோம். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஏப். 17) சென்னையில் இருந்து சேலத்திற்கு கார் மூலம் வந்தார். பின்னர் அவர், சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இக்கூட்டம் நடந்தது.
நோய்த்தொற்று அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு அதிகாரிக்கு இடையே மூன்று மீட்டர் இடைவெளி விட்டு இருக்கைகள் போடப்பட்டிருந்தன. சமூக இடைவெளிக்கு குறைந்தபட்சம் 3 அடி இடைவெளி போதுமானது என்றாலும், இக்கூட்டத்தில் 3 மீட்டர் வரை இடைவெளி விடப்பட்டு இருந்தது.
மேலும், ஊடகத்துறையில் படங்கள் எடுக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதிலும் செல்போனில் படங்கள் எடுக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. செய்தி சேகரிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
காவல்துறை, சுகாதாரத்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் கூட்டத்திற்கு வந்தபோது, அவரை அடையாளம் தெரியாததால் பாதுகாவலர்கள் கூட்டரங்கிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் அவர் அடையாள அட்டையைக் காட்டிய பிறகே அனுமதித்தனர்.
கூட்ட முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு காலத்தில் விவசாயிகள், விளை பொருள்களை சந்தைக்கு எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை. வரும் 20ம் தேதிக்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இதற்காக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் ஒரு கு-ழு அமைக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இதனை ஜவ்வரிசியாக்க அனுமதிக்க வேண்டும் என ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பரிசீலனை செய்து வருகிறோம். கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளைக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய 1.25 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் உபகரணங்களை வாங்க சீனாவிடம் ஆர்டர் கொடுத்துள்ளோம். இதில் 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. மத்திய அரசு 14 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை வழங்கி உள்ளது. தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் செய்ய வேண்டியுள்ளதால் 50 ஆயிரம் டெஸ்ட் கிட்டுகள் தேவை என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
நிதியாக இருந்தாலும், ரேபிட் டெஸ்ட் கிட்டுகளாக இருந்தாலும் மத்திய அரசு, தமிழக அரசிடம் பாரபட்சம் காட்டுகிறதா? என்கிறீர்கள். பாரபட்சம் என்று பார்ப்பதற்கு இது சரியான நேரமல்ல. யார் கொடுத்தாலும் கொடுக்காமல் போனாலும் தமிழக அரசு சார்பில், 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மக்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
தமிழகத்தில் நேற்று வரை கொரோனா தொற்று உடைய 1248 பேரில் 180 பேர் குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆரம்பக்கட்டத்தில் வந்தால் சிகிச்சை அளிக்க முடியும். பலர் நோய் முற்றிய நிலையில் சிகிச்சை வருகின்றனர். நோய்க்கான அறிகுறி தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. ஒட்டுமொத்த அரசு எந்திரமும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இறங்கி செயல்பட்டு வருகிறது. இது மருத்துவத்துறை சார்ந்த பணி. மருத்துவ வல்லுநர்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு சொல்கிற வழிமுறைகளை பின்பற்றி அரசு செயல்படுகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது?
எங்களை பொருத்தவரை மக்களுக்கு பணி செய்ய வேண்டும். பணி செய்யும் மருத்துவர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைய வழிமுறைகளைக் கையாண்டு மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்பதே தலையாய பணி. இதற்காக எதிர்க்கட்சிகள் நல்ல ஆலோசனைகளை சொன்னால் ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.