கும்பகோணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில் சென்னையில் வேலை செய்யும் கணவரை பார்க்க தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் வந்துள்ளார். பின்பு அவரை சந்தித்துவிட்டு நேற்று முன் தினம் இரவு தாம்பரத்தில் இருந்து இரவு உழவன் விரைவு ரயிலில் தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் கும்பகோணத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது ரயிலில் அவர்கள் புக் செய்திருந்த டிக்கெட்டின் கீழ் படுக்கை காலியாக இருந்ததால் அதனை தங்களுக்கு தருமாறு டிக்கெட் பரிசோதகர் தாமஸ் வெல்லஸியிடம் கேட்டுள்ளார். அவரும் கீழ் படுக்கையை ஒதுக்கித் தந்துள்ளார். இதனைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த பெண் மயிலாடுதுறை ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தாமஸ் வெல்லஸியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு டிக்கெட் பரிசோதகரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.