
வேளாங்கண்ணி அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த பி.ஆர்.புரம், ராமர் மடத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (25). கூலித்தொழிலாளியான இவர், ஆஞ்சநேயர் கோயில் பின்புறம் அவ்வழியே வந்த 10 வயது சிறுமியின் வாயைப் பொத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ந்து போன சிறுமி, அவரது பிடியிலிருந்து தப்பி உடனடியாக வீட்டிற்கு சென்று நடந்தவற்றை பெற்றோர்களிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரமேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ரமேஷ்குமாரை போலீசார் நாகையில் உள்ள மாவட்ட சிறையில் இன்று அடைத்தனர்.