பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வின் ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு ‘இந்து’ வெளியீட்டுக் குழுமத்தின் தலைவர் என்.ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய அளவில் இதழியல் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பல்வேறு விருதுகளை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டுக்கான ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு மூத்த பத்திரிகையாளரும், ‘இந்து’ வெளியீட்டுக் குழுமத்தின் தலைவருமான என்.ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நவம்பர் 16-ம் தேதி தேசிய பத்திரிகை தினத்தன்று இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
மேலும், கிராம இதழியல் பிரிவுக்கான விருதை போபால் ‘தேஷ்பந்து’ தலைமை நிருபர் ரூபி சர்க்கார், ரத்னகிரி ‘டெய்லி புதரி’யின் ராஜேஷ் பரசுராம் ஜோஷ்தே ஆகியோர் இணைந்து பெறுகின்றனர்.
‘டெவலப்மென்ட்டல் ரிப்போர்ட் டிங்’ பிரிவில், கேரள கவுமுதியின் துணை ஆசிரியர் வி.எஸ்.ராஜேஷுக்கும், புகைப்பட இதழியல் பிரிவில், டெல்லியின் ராஷ்டிரிய சகாராவைச் சேர்ந்த சுபாஷ் பாலுக்கும், டெல்லியில் உள்ள பஞ்சாப் கேசரியின் புகைப்பட இதழியலாளர் மிஹிர் சிங்குக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது.
சிறந்த பத்திரிகை வரைகலை, கார்ட்டூன் பிரிவில் ஹைதராபாத்தின் நவ தெலங்கானா பத்திரிகை கார்ட்டூன் ஆசிரியர் பி.நரசிம்மாவுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு புதிதாக அறிமுகப் படுத்தப்பட்ட விளையாட்டு செய்திப் பிரிவில் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வின் ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு தேர்வாகியுள்ள ‘இந்து’ என்.ராமுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,‘‘ராஜாராம் மோகன் ராய் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுபெரும் பத்திரிகையாளர் என்.ராமுக்கு எனது வாழ்த்துகள். இதழியல் துறைக்கு பல ஆண்டு களாக அவர் அளித்து வரும் பங் களிப்பு பாராட்டுக்குரியது” என்று தெரிவித்துள்ளார்.