Skip to main content

பரபரப்புக்குப் பின்னர் பி.டி.ஆரிடம் மன்னிப்பு கோரிய உயரதிகாரிகள்!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

High officials apologize to PTR after the riots

 

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (30.09.2021) காலை ஐந்து மணியளவில் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்வதற்காகச் சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். விமான நிலையத்தில் உள்ள மத்திய பாதுகாப்புப் படையினர் அனைத்து பயணிகளையும் சோதனை செய்து உள்ளே அனுப்பிவந்துள்ளனர். அப்போது நிதியமைச்சரையும் தடுத்து நிறுத்தி அவரது உடைமைகளைச் சோதனை செய்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது கைப்பையை ஸ்கேன் மூலம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை உதவி  ஆய்வாளர் ஒருவர் பரிசோதித்துள்ளார்.  அந்த பையில் இரண்டு லேப்டாப்கள் இருந்துள்ளது.

 

விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம், “ஏன் இரண்டு லேப்டாப்கள் கொண்டு செல்கிறீர்கள்?” என மத்திய தொழிற்படை போலீஸார் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘நான் மாநில நிதி அமைச்சர் எனது அவசர தேவைக்காக எடுத்துச் செல்கிறேன்’ என்றார். அதனைத் தொடர்ந்தும் பாதுகாப்பு வீரர்கள் அவரை அனுமதிக்காத போது “பயணிகள் 2 மடிக்கணினியைக் கையில் எடுத்துச்செல்லக் கூடாது என்ற எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இருக்கிறதா?” என அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். தொடர்ந்து, தான் தமிழ்நாடு நிதியமைச்சர் என்பதையும் அந்த அதிகாரியிடம் அவர் தெரியப்படுத்தி, இந்தியிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர், அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

இதனை அறிந்து அங்கு வந்த விமான நிலைய உயர் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தாங்கள் அமைச்சர் என்று தெரியாமல் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததாகக் கூறி அமைச்சரிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்குப் பின்னர், வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரியும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கோரினார். பத்து நிமிடங்கள் ஏற்பட்ட இந்தப் பரபரப்பிற்குப் பின்பு அமைச்சர் புறப்பட்டு தூத்துக்குடி சென்றடைந்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்