Skip to main content

“நீலகிரி ஆட்சியர் ஆஜராக வேண்டும்” - உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 04/11/2024 | Edited on 04/11/2024
High Court order for Nilgiri Collector must appear

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ - பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த இ - பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம்?, எத்தனை பேர் வருகின்றனர்?. ஒரு நாள் சுற்றுலாவா?, தொடர்ந்து தங்குவார்களா? என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் எனவும் இரு மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதிஷ்குமார், பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (04.11.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், “இ பாஸ் பெற விண்ணப்பிப்பவர்களிடம் எப்போது வருகிறார்கள், எங்குத் தங்க இருக்கிறார்கள், எத்தனை நாட்கள் தங்குவார்கள் என்ற விவரங்கள் பெறும் வகையில், விண்ணப்பத்தில் புதிய திருத்தங்கள் அரசு தரப்பில் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, “அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சில புள்ளிவிவரங்கள் தவறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது”என நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இதனைக் கேட்டறிந்த நீதிபதிகள், “ஊட்டியில் உள்ள உரிமம் பெற்ற விடுதிகள், ரிசார்ட்கள் குறித்த விவரங்களை அரசு இணையதளத்தில் பதிவேற்றச் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாகப் புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊட்டியில் உள்ள ரிசார்ட்கள் முழுமையான விவரங்களை அரசு இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அடுத்த விசாரணையான நவம்பர் 8ஆம் தேதியன்று இன்றைய விசாரணையின் போது கேட்கப்பட்ட தகவல்களோடு நீலகிரி மாவட்ட ஆட்சியர் காணொலி காட்சி மூலம் ஆஜராகும்படி உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 8ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

சார்ந்த செய்திகள்