
தமிழக முழுவதும் 40 இடங்களில் நேற்று சோதனை நடத்திய நிலையில், 2-வது நாளாக இன்றும் சிபிஐ அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்தனர்.
இதில் மீண்டும் முகப்பேர் மேற்கில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீடு, அவரது அலுவலகம், குட்கா ஊழலில் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜின் வீடு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளிலும் சி.பி.ஐ.சோதனை நடத்தப்பட்டது. அமைச்சரின் உதவியாளர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சில பினாமிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு நிறைவடைந்தது.
இந்த நிலையில் மேலும் சில பகுதிகளிலும் இன்று மாலை சோதனை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட்கா ஊழல் விசாரணையில் சி.பி.ஐ. பிடி இறுகுவதால் இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க கீழ்பாக்கம் ஏ.சி., ராஜா தன்னுடைய பணியை விடா முயற்சியில் நேற்று இரவில் இருந்து ரெய்டு செய்து குட்கா, பான் மசலா, மாவா, ஹான்ஸ் போன்ற போதைப்பொருட்களை சேத்துப்பட்டு, விவேகானந்தா தெரு, கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை கைப்பற்றி, குமார், முகமது அலி, ஜின்னா ஆகியோரை கைது செய்துள்ளார்.