தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்தந்த மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய அரசும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; சோப்பு அல்லது கிருமிநாசினியைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், அலுவலகங்களில் சானிடைசர் கட்டாயம் வைக்கப்பட வேண்டும், பணியாளர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்த பிறகே அவர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை தமிழக அரசு அவ்வப்போது கூறிவரும் நிலையில், பொதுமக்களின் அலட்சியம் காரணமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டாததும் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, கரோனா குறித்து மக்களிடம் கட்டுப்பாடு இல்லை; ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை. மக்களிடம் கட்டுப்பாடு இல்லாதது கரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பாக அமைந்துவிடும் என்று கவலை தெரிவித்துள்ளார். மேலும், நோய்த் தாக்கத்தைக் குறைக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கை தேவை என்று தெரிவித்துள்ளார்.