மலைப்பகுதிகளில் வாழும் மக்களிடம் நாட்டு துப்பாக்கிகள் சகஜமாக புழங்கும். ஆனாலும் அவர்கள் காவல்துறையிடம் அதற்கான அனுமதி பெற்றுதான் வைத்திருக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் மலைக்கு கீழ் வாழும் கிராமப்புறங்களில் சிலரிடம் நாட்டு துப்பாக்கிகள் அடிக்கடி சிக்குவது போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே திருவண்ணாமலை டூ பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண்மலை மற்றும் குமாரமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விஜயகுமார் மற்றும் அன்பு ஆகியோர் வீட்டில் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அந்த வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, அனுமதி பெறாத நாட்டு துப்பாக்கி வைத்திருப்பது உறுதியானது. அவர்கள் இருவரிடமிருந்து தலா ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
இந்த தகவலை செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கத்துக்கு தகவல் கூறினர். அவரின் உத்தரவுப்படி இருவரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து நாட்டு துப்பாக்கி எப்படி கிடைத்தது, எவ்வளவு தொகை்கு வாங்கினார்கள், எதற்காக இந்த நாட்டு துப்பாக்கி என விசாரணை நடத்திவருகின்றனர்.