முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் மசினி என்ற யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டு மசினி என்ற யானை முதுமலை காப்பகத்திலிருந்து திருச்சி சமயபுரத்திற்கு கோவில் யானையாகச் சென்றது. அப்போது மசினி யானை அதன் பாகனை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் மசினி யானை முதுமலை யானைகள் முகாமிற்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.
இதையடுத்து மசினி யானையை பாலன் என்ற பாகன் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் இன்று பாலன் யானைக்கு உணவளித்துவிட்டு அதன் மேல் அமர்ந்து காட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென யானை பாகன் பாலனைத் தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து பாலனின் உடல் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த பாலனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்குப் படிப்புக்கு ஏற்றார்போல் அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதுமலை புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.