Skip to main content

காவலர் பணிக்கான வயது வரம்பில் தளர்வு கோரி போராட்டம்! 

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
Guard work


புதுச்சேரியில் புதியதாக நியமிக்கப்படவுள்ள 537  காவலர் பணிக்கான தேர்வினில் வயது வரம்பு தளர்த்த வேண்டும் என கோரி பட்டதாரி இளைஞர்கள்  பல்வேறு புகார் மனுக்கள் அரசுக்கு அளித்ததுடன் பல்வேறு போராட்டங்களையும்  நடத்தினர். 
 

முதல்வர் நாராயணசாமி வயது வரம்பில் தளர்வு ஏற்படுத்தி தருவோம் என உறுதியளித்தார். அது சம்பந்தமாக கோப்புகள் அனுப்பியதாகவும்  கூறினார். 


இந்த நிலையில் தேர்விற்கான விண்ணப்பம் பெறும் கடைசி தேதி 22.09.2018 என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் வயது வரம்பு தொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்பட வில்லை.
 

அதேசமயம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சட்டப்படி ஆர்.ஆர் மாற்றம் கொண்டு வந்த பிறகு தான் வயது வரம்பில் தளர்வு உருவாக்கப்படும் என கூறுவதாக  தகவல் வெளியாகியுள்ளன.
 

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு எடுக்கும் முடிவிற்கு ஏற்றபடி துணைநிலை ஆளுநர் ஒரு முறை தளர்வு ஏற்படுத்தி தர அதிகாரம் உள்ளது என கூறும் பட்டதாரி இளைஞர்கள், வேண்டுமென்றே பல்வேறு காரணங்களை காட்டி பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இழந்துள்ள இளைஞர்களுக்கு எதிராக நடப்பதாக குற்றம் சாற்றுகின்றனர்.
 

தற்போது பொதுபட்டியல் 18 - 22, பிற்படுத்தப்பட்ட- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18 - 25, தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவருக்கு 18 -  27 என வயது வரம்பு உள்ளது.  ஆனால் தமிழகத்தில் பொதுப்பட்டியல் 18 - 24,  பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 - 26 வயது.  தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவர் 18 - 29 வயது என அரசாணை வெளியிட்டு 2017 ஆம் ஆண்டு காவலர்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ரெயில்வே துறை உள்ளிட்டவைகளுக்கும் இதே வரம்புதான்.  
 

 தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் புதுச்சேரி மாநிலம் பின்பற்றும் வயது வரம்பை விட இரண்டு ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலம் மட்டும் இரண்டு ஆண்டு குறைத்து வயது வரம்பை வைத்திருப்பது ஏன் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர். 
 

புதுச்சேரி அரசு நான்கு நாட்களில் தங்களது விண்ணப்பம் ஏற்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் ஆன்லைன் மூலம் விண்ப்பிக்கும் போது  விண்ணப்பங்களை ஏற்க மறுப்பதாக இளைஞர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
 

அதையடுத்து  ராஜா திரையரங்கம் அருகே ஒன்று கூடிய பட்டதாரி இளைஞர்கள் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சுவாமிநாதன் தலைமையில்  பேரணியாக வந்தனர். 
 

தலைமை தபால் நிலையம் வந்தவர்கள் தபால்  மூலமாக  விண்ணப்பங்களை காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பினர்.  விண்ணப்பத்தினுடன்  வயது வரம்பு தளர்வு கேட்டு வேண்டுகோள் கடிதமும் இணைத்தனர். 
 

 துணைநிலை ஆளுநர் மற்றும் மாநில முதல்வர் பட்டதாரி இளைஞர்களின்  நியாமான போராட்டத்திற்கு மதிப்பளித்து அனுப்பிய விண்ணப்பங்களை ஏற்க வேண்டும் எனவும்,  இரண்டு நாட்களில் நல்ல தீர்வு எட்டவில்லை என்றால் சாகும் வரை உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  
 

இப்போராட்டத்தில் புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முருகன், எழிலன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சுகுமாரன்,  தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளங்கோ,  தலித் பாதுகாப்பு இயக்கம் ராஜா. இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அறிவுமணி,  இந்திய இளைஞர் முண்ணனி கலைப்பிரியன்,  பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா,  சட்டப்பஞ்சாயத்து ஜெபின்,  அரசியல் களஞ்சியம் கந்தகுமார்,  திரிணாமுல் காங்கிரஸ் எத்திராஜ்,  திராவிடர் கழகம் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர்  பங்கேற்றனர்.


 

சார்ந்த செய்திகள்