சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, அகரம் சந்திப்பு அருகே இருக்கும் ஒரு சிறிய கோயிலில் மூதாட்டி ஒருவர் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த விளக்கின் மூலம் மூதாட்டியின் சேலை நுணியில் தீப் பற்றியது. அப்போது அதே இடத்தில் இருந்த போக்குவரத்து தலைமை காவலர் செந்தில் குமார், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
மூதாட்டியின் சேலையில் தீப்பற்றியதைக் கண்ட அவர், உடனடியாக மூதாட்டியின் சேலையில் பற்றிய தீயை மேலும் உடலுக்குப் பரவாதபடி தனது கைகளால் தீயை அணைத்தார். தலைமை காவலர் செந்தில் குமாரின் அந்த உடனடி செயல்பாட்டால், மூதாட்டி தீக்காயமின்றி தப்பித்தார். இந்த நிகழ்வால் பதற்றமடைந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் ஆஸ்வாசம் செய்து அவருக்குத் தண்ணீர் கொடுத்து சகஜ நிலைக்குத் திருப்பினர். இந்நிகழ்வில், தலைமை காவலர் செந்தில் குமாருக்கு சிறிய அளவிலான தீக்காயம் ஏற்பட்டது.
மூதாட்டி சேலையில் தீப் பிடித்ததும், அதனை தலைமை காவலர் செந்தில் குமார் துரிதமாகச் செயல்பட்டு அணைத்ததும் அந்தக் கோயிலின் எதிர்புறத்தில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. மேலும், தலைமை காவலர் செந்தில்குமாருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.