அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.