Skip to main content

அரசுப் பள்ளி மாணவன் கல்லால் அடித்து கொலை... சக மாணவர்கள் 3 பேர் கைது!

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

govt school Incident in nellai... police investigation

 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அரசு பள்ளி மாணவன் ஒருவனை சகமாணவர்கள் மூன்று பேர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீப காலமாக அரசு பள்ளிகளில் சில மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுவது, சக மாணவர்களை தாக்குவது, போதை பொருட்களை பள்ளியிலேயே பயன்படுத்துவது என பல்வேறு வீடியோ காட்சிகள் வெளியாகி தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில் நெல்லையில் அரசு பள்ளியில் சக மாணவர்களால் கல்லால் தாக்கப்பட்டு ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பள்ளக்கால் பொதுக்குடி என்ற கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் அந்த சுற்றுவாட்டார பகுதியைச் சேர்ந்த பலர் பயின்று வந்தனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த செல்வசூர்யா என்ற மாணவனுக்கும், அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவனுக்கும் இடையே கையில் சமூகத்தை குறிப்பிடும் கயிறு கட்டுவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் தரப்பு தாக்கிக்கொண்டனர். இதில் ஒரு மாணவர் செல்வசூர்யாவை கல்லால் தாக்கியதில் காதில் காயம் ஏற்பட்டது. உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக மாணவன் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

 

இதுகுறித்து விசாரித்து வரும் பாப்பாக்குடி காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிறார்கள் என்பதால் அவர்களது பெயர்களை போலீசார் வெளியிடவில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளி  சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சக மாணவர்களால் 12 ஆம் வகுப்பு மாணவன் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்