ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க விதித்த தடை நவம்பர் 13- ஆம் தேதி வரை தொடரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கின் விசாரணையும், அதே நாளில் நடைபெறும் என கூறியுள்ளது.
கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவும் போட்டியிட்டனர். அதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு வழக்கு தொடர்ந்ததால், நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எம்.எல்.ஏ இன்பதுரை உச்சநீதிமன்றத்தை நாடியதால் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.