Skip to main content

சட்டவிரோத கட்டுமானங்கள்; அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் அவகாசம்

Published on 22/06/2021 | Edited on 22/06/2021
"Government officials are also involved in the illegal construction case" - Judge

 

சென்னையில் விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள 5,574 சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,  ராயபுரத்தை போல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது  நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். மேலும், ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் அவகாசம் வழங்கி இருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 வார கால அவகாசம் கேட்கப்பட்டது.

 

அதனை ஏற்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான ஆய்வு தேவைப்படும் எனவும், கரோனா இரண்டாவது அலை காரணமாக அதற்கு அவகாசம் தேவைப்படும் என்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததுடன், அரசுக்கு 9 வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், விதிமீறல் கட்டுமான விவகாரத்தில், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது எனவும், பணம் கைமாறி இருக்கலாம் என்றும் தெரிவித்த நீதிபதிகள், இதை அரசு தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
 

 

சார்ந்த செய்திகள்