நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைத்திருக்கும் நிலையில் ரேபரேலி, வயநாடு என இரண்டு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் அந்த தொகுதிக்கு வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரசின் பிரியங்கா காந்தி போட்டியிட இருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சத்யன் மோக்கேரி போட்டியிடுகிறார்.
அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் சீர்செய்யப்பட்டுவரும் நிலையில் தற்போது இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக யாரை களத்தில் இருக்கும் என்பது தொடர்பான கேள்விகள் இருந்தது. பிரியங்கா காந்தியை எதிர்த்து குஷ்பு களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜக தலைமை வைத்துள்ள உத்தேச வேட்பாளர்கள் பட்டியலில் குஷ்புவின் பெயர் இடம்பெற்றுள்ளதாக கேரள செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தது. இருப்பினும் உறுதியாக அதிகாரப்பூர்வமாக பாஜக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.