சாமி சிலைகள் கடத்தல் தற்போது தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இந்து அறநிலைதுறை அதிகாரிகள் தான் பெரிய அதிர்ச்சியில் முழ்கியுள்ளனர். இதன் விசாரணை அதிகாரியான பொன்மாணிக்கவேல் பணியிலிருந்து மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு முயற்சி செய்த நிலையில் உச்சநீதிமன்றம் பொன்மாணிக்கவேல் நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரே கடைசி வரை இந்த வழக்கை விசாரிக்கலாம் என்று நீதிமன்ற அறிவிப்புக்கு பிறகு இன்னும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் திருச்சியில் மீனவர்கள் வலையில் சிலை சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அணையில் நீர் வரத்து தற்போது குறைந்துள்ளது. இதனால், திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வலையில் கனமான ஏதோ ஒன்று சிக்கியது. இதனால் மீனவர்கள் வேகமாக வலையை இழுத்து பார்த்தனர். அப்போது வலையில் உலோகத்திலான பிள்ளையார் மற்றும் நடராஜர் சிலைகள் சிக்கியது தெரிய வந்தது.
இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் வருவாய் தாசில்தார் ராஜேஷ்கண்ணா, விஏஓ முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அங்கு வந்த சிலைகளை மீட்டு எடுத்துச் சென்றனர். சிலைகளை யாராவது திருடிக் கொண்டு வந்து ஆற்றில் வீசியிருக்கலாம் என்றும், சிலைகள் எந்த கோயிலுக்கு சொந்தமானது என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.