‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் முனைவர் இராம சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி பேசியது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
கஸ்தூரி பேசியது கேவலமான பேச்சு. அவர் பேசியது தெலுங்கர்களைக் கேவலப்படுத்தும் வகையில் இருக்கிறது. அவரின் சொல்லாடல் மிகவும் மோசமாக இருந்தது. கஸ்தூரி சர்ச்சைக்குரிய ஆள். ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தின்போது எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு வந்தது. அப்போது பலரும் அவரை கண்டித்தனர். அந்தளவிற்கு அவரின் வார்த்தை மோசமானதாக இருந்தது. கஸ்தூரி நாவடக்கம் இல்லாமல் இஷ்டத்துக்குக் பேசக்கூடிய ஆள். பிராமணர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறதோ அதை மேடையில் பேசியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர் சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பேசுவதை கேவலமாகப் பார்க்கின்றேன். அந்த ஆர்ப்பாட்டத்திற்கான நோக்கத்தை விட்டுவிட்டு தி.மு.க.-வை திட்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அதனால் அந்த ஆர்ப்பாட்டம் தோல்வியடைந்துள்ளது.
பிராமணர்களை இழிவுபடுத்துகிறார்களென்றால் அதை மட்டும் பேசியிருக்க வேண்டும். பார்ப்பான் என்பது கெட்ட வார்த்தை இல்லை. முட்டையில் இருந்து குஞ்சு வரும் நிகழ்வைத்தான் பார்ப்பு என்கிறோம். அதே போல் பிராமணர் என்பது செய்யக்கூடிய தொழிலைத் தர்மமான பாதையில் நடத்தினால் பிராமணராக மாறுவீர்கள் என்பதுதான் பொருள். இதற்கு வஷீசர், சவுணகர் போன்ற முனிவர்களை உதாரணமாகச் சொல்லலாம். இவர்கள் பிறவியில் பிராமணர்கள் கிடையாது. ஆனால் பிரம்ம ஞானி என்று பெயர் பெற்றவர்கள். இன்றைக்கு பிராமணர் என்று யாருமே கிடையாது. நான் சத்தியமாகப் பிராமணர் கிடையாது. ஏனென்றால் நான் அந்தளவிற்குத் தூய்மையான பிரம்ம ஞானி யாரும் இல்லை. பிராமணர் என்றால் அந்தணர் என்று வேறு ஒரு பொருள் உள்ளது. அது திருக்குறளில் இருக்கும். இறைவனைத்தவிர இப்போதுள்ள கலி உலகத்தில் அந்தணராக இருப்பது யாரும் இல்லை. அதற்கு வாய்ப்பும் கிடையாது.
இப்போது பிராமணர்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கு நிறையப் பிரச்சனை இருக்கிறது. பார்ப்பான் என்று சொல்லுவதால் அந்த சமூகத்தினருக்கு அது அவமரியாதையாக இருக்கிறது. இது போன்ற பிரச்சனைகளை அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியிருந்தால் அது சரியானதாக இருந்திருக்கும். ஆனால் கண்மூடித்தனமாக தேவையற்றதை இழுத்துப் பேசுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு எந்தவித அழைப்பும் எனக்கு வரவில்லை. முன்பு நான் நக்கீரனில் சனாதனம் குறித்துப் பேசியது நான் துணை முதல்வர் உதயநிதிக்கு ஆதரவாகப் பேசியதாக பா.ஜ.க. மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய பிரச்சனை உருவாக்கினார்கள். 100க்கும் மேற்பட்ட பிராமணர்கள் என் வீட்டின் முன்பு வந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டனர். அப்போது பிராமண சங்கத்தை சேர்ந்த ஒருவர், என்னை பிராமணர்தான் என்று கூறி, சனாதனம் பற்றி உதயநிதி ஸ்டாலின் சொன்னதைத்தான் நானும் பேசினேன் என்று சொல்லி அந்த கண்டனை ஆர்பாட்டத்தை தடுத்ததோடு. தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தால் சிறைக்குப் போவீர்கள் என்று கூறி அந்த 100க்கும் மேற்பட்டோருக்குப் புரிய வைத்தார் என்றார்.