Skip to main content

சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்துகள்!  -பதிவு செய்பவர்களின் பட்டியலை அளிக்க உத்தரவு!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துகளைப் பதிவு செய்பவர்களின்  பட்டியலை தமிழகம் முழுவதும் சேகரித்து  அறிக்கை அளிக்க வேண்டும் என்று சைபர் கிரைம் ஏடிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சில கருத்துகளைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,  சமூக வலைத்தளங்களில் கடுமையாக ஆபாச வார்த்தைகளைப் போட்டு  அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

Give a list of registered users!- highcourt order


நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியலமைப்பு பதவி வகிப்பவர்கள் குறித்தும், அவர்களது குடும்பத்தினர் குறித்தும் தனிப்பட்ட முறையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டு பதிவு செய்தவர்களின் பட்டியலை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்,  இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்த நீதிபதி, இதுபோல் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களை வெளியிடுபவர்கள் மீது  நடவடிக்கை எடுப்பதற்காக என்ன மாதிரியான நடைமுறை வைத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழகம் முழுவதும் இது போல் கருத்துக்களைப் பதிவு செய்பவர்களின் பட்டியலை சேகரித்து அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளார்.  மனுதாரர் இனிமேல் இதுபோன்ற கருத்துகளை வெளியிட மாட்டேன் என்று மன்னிப்புக் கடிதம் அளித்தால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்