திருச்சியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஒருவர், சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு உடல் பருமனாக இருந்ததால் உடல் எடையைக் குறைக்க பல்வேறு சிகிச்சை முறைகளைப் பின்பற்றி வந்துள்ளார். இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளானவர், கடந்த 24ம் தேதி மதியம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அச்சிறுமி தூக்கில் தொங்கி உள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கண்ட்டோன்மென்ட் காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அந்தப் பெண் அதிக உடல் பருமன் ஏற்பட்டு தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகளை பின்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் உடல் எடை குறைப்பது தொடர்பான பட்டியலை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் உடல் பருமனாக இருப்பதால் தொடர்ந்து மனரீதியாக அவர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர்.
தற்போது இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "உடல் பருமன் தொடர்பாக ஒரு உயிர் நம்மைவிட்டு பிரிந்திருப்பதை ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கிறது. அழகு மற்றும் ஆரோக்கியம் பற்றி இந்தச் சமூகம் கட்டி வைத்திருக்கும் போலி பிம்பத்தை இந்த மரணம் உலுக்கி இருக்கிறது" என்று சமூக ஆர்வலர்கள் தங்களின் வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர். மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளைப் பெற்றோர்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.