Skip to main content

முகவரி கேட்பது போல் நடித்து செல்போன் பறிப்பு; சிறுவன் உட்பட மூவர் கைது 

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

 erode thindal kadaparai cell phone incident child involved

 

ஈரோடு திண்டல் காரப்பாறை மெடிக்கல் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன்(வயது39). மருந்து விற்பனை பிரதிநிதியான இவர் சம்பவத்தன்று இரவு ரங்கம்பாளையத்திலிருந்து திண்டல் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு ஸ்மார்ட் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரிடம் முகவரி கேட்டனர். ராஜசேகரன் முகவரியை அவர்களிடம் கூறிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் நடுவில் அமர்ந்த நபர் திடீரென ராஜசேகரன் கையில் வைத்திருந்த ஸ்மார்ட் ஃபோனை பறித்துக்கொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜசேகரன், மோட்டார் சைக்கிளில் அவர்களைப் பின் தொடர்ந்தார். ராஜசேகரனுக்கு உதவியாக அந்த வழியாக வந்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். பெருந்துறை சாலையில் இருந்து காரப்பாறை பிரிவு சாலையில் திரும்பும் போது செல்போன் பறித்துச் சென்ற 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை ராஜசேகரன் மற்றும் அவருக்கு உதவிக்கு வந்த 2 பேர் வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களை ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

விசாரணையில் அவர்கள் பெருந்துறை, பழைய பாளையம், எல்லீஸ் பேட்டை, இரட்டை வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா (23), காங்கேயம் சிவன்மலை அடிவாரம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் (19) மற்றும் 17 வயது சிறுவன் எனத் தெரிய வந்தது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 15 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் ஃபோனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கிருஷ்ணா மற்றும் சூரிய பிரகாஷ் இருவரும் ஈரோடு கிளை சிறையிலும், 17 வயது சிறுவன் கோவையில் உள்ள சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்