திண்டுக்கல்லில் விஷவாயு தாக்கியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கோட்டைக்குளம் சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான வெற்றிவேல். இவரது மனைவி முத்துமாரி. இவர்களது ஒரே மகன் லிங்கேஸ்வரன் (வயது 7). இவர்கள் கோட்டைக்குளம் அருகே உள்ள பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
இக்கோவிலின் எதிரே பெரிய தொட்டி ஒன்று உள்ளது. அத்தொட்டி விநாயகர் சிலையை கரைப்பது, அக்னி சட்டிகளை கரைப்பது போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தொட்டி சுத்தம் செய்யப்படாததால் அதில் அதிக அளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. இந்நிலையில், மாற்றுத்திறனாளி வெற்றிவேல் தனது ஏழு வயது மகன் லிங்கேஸ்வரனுடன் தொட்டியில் தவறி விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தந்தை மற்றும் மகனைக் காப்பாற்ற தீயணைப்புத் துறையைச் சேர்ந்த கார்த்திக், சுரேஷ், ராஜ்குமார் தொட்டியில் இறங்கியுள்ளனர். அப்பொழுதும் விஷவாயு தாக்கியுள்ளது. மயக்கமடைந்த சிறுவன் லிங்கேஸ்வரன் மற்றும் தீயணைப்புத் துறையினர் மூன்று பேரையும் மற்றவர்கள் மீட்டனர். ஆனால், மாற்றுத்திறனாளியான வெற்றிவேல் விஷவாயு தாக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மீட்கப்பட்ட சிறுவன் உட்பட நான்கு பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.