விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் இரண்டாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்து அமைப்புகள் சார்பில் மட்டுமன்றி தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது வடிவங்களில் விநாயகர் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விநாயகர் சதுர்த்தி வழிபாடு கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை வளமாக்குவது மட்டுமின்றி அவர்களின் படைப்பாற்றல் திறனையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. ஒரு அடிமுதல் 12 அடி வரையிலும் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுகின்றன. ரசாயன பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் காகிதம் கூழை பயன்படுத்தியே இந்த சிலைகள் உருவாக்கப்படுகின்றன. விநாயகர் சிலைகள் தயாரிப்பு விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் அதிக அளவில் ஈடுபட்டுவருகின்றனர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூன்று முதல் ஐந்து மாதங்கள் மட்டுமே இத்தொழில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வழிபாட்டுக்கு பயன்படுத்தி விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் தயாரிப்பு பணியில் ஆண்டு முழுவதும் நடைபெறும் தொழிலாக மாறி இருப்பது கைவினைக் கலைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக திண்டுக்கல் அருகே உள்ள போக்குவரத்து நகரில் இந்து முன்னணி அமைப்புக்காக சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த கைவினைக் கலைஞர் பத்மாவதி கூறியபோது... விநாயகர் சதுர்த்தி விழாவுக்காகதான் சிலை தயாரிப்பு பணிகள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொலு பொம்மைகள் மட்டுமே தயாரித்து வந்த கைவினை கலைஞர்களின் வாழ்வில் விநாயகர் சேர்த்து வழிபாடு முக்கியத்துவம் பெற்றது பத்து ஆண்டுகளுக்கு முன்பு மூன்று மாதங்கள் மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரிப்பு. தற்போது ஆண்டு முழுவதும் நடைபெறும் தொழிலாக மாறிவிட்டது. சிலை பாகங்களை தனித்தனியாக கேட்கப்படும் இடங்களுக்கு எடுத்துச் சென்று அதனை ஒன்றிணைத்து முழு சிலையாக உருவாக்கி வண்ணம் தீட்டி விற்பனை செய்கிறோம் சிலைகளின் உயரத்திற்கு ஏற்ப 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. விநாயகர் சதுர்த்தி வழிபாடு எங்களைப்போன்ற கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமின்றி படைப்புக்களையும் அழியாமல் பாதுகாத்துள்ளது என்று கூறினார்.
பண்ருட்டியை பூர்வீகமாக கொண்ட விஜயலலிதா ஒரு பிடெக் பட்டதாரி தற்போது ஈரோட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் திண்டுக்கல் பகுதியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் கூறியதாவது,
பெற்றோரிடமிருந்து அனுபவம் மூலம் கிடைத்த படைப்புத்திறன் பி.டெக் மூலம் கிடைக்கவில்லை தெய்வச் சிலைகளை வடிவமைப்பது என்பது எல்லாராலும் செய்யமுடியாது. ஒரு கைவினைக் கலைஞர் என் மகளான எனக்கு அதற்கான கால அனுபவங்கள் இயல்பாகவே அமைந்துள்ளது. சிலை வடிவமைப்பு வண்ணம் தீட்டுதல் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன். நவராத்திரி திருவிழாவை மட்டும் கைவினைக் கலைஞர்கள் நம்பியிருந்த காலம் மாறி தற்போது ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு உள்ள தொழிலாக மாறி உள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய அவசியமும் தவிர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார்.